தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியை மது பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சிங்கமுத்து (47). இவர் மூன்று சக்கர வாகனங்களில் சென்று சிறு சிறு வேலைகள் பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சின்ன ஓலாபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நண்பர்களை சந்திக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து சிங்கமுத்து வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்து அவரை தேடிப் பார்த்த போது இன்று காலை, மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிங்கமுத்துவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிங்கமுத்து அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சிங்கமுத்து நண்பர்களுடனும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்து போலீசார், அவரது நண்பர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.