நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு இதுவரை 89,585 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! அமைச்சர் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு இதுவரை 89,585 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். மேலும், 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்றும், பேராசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழ்நாட்டில் இதுவரை 3 சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. அவர்கள் உடனே கல்லூரிகளில் சேர உத்தரவிப்பட்ட உள்ளது. அதன்படி, இதுவரை  89,585 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   தற்போது நடைபெற்று வரும் 4வது சுற்று கலந்தாய்வு நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. கடந்த ஆண்டை விட பொறியியல் படிப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும், 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்றும், பேராசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழகத்தில் பி.இ., பி.டெக். என பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடந்தது. இரண்டு சுற்றுகள் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 323 கல்லூரிகளில் இதுவரை 10% இடங்கள் கூட நிரப்படப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில் 12 கல்லூரிகளில் மட்டுமே 90% இடங்கள் நிரம்பின. 50% க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 48 மட்டுமே.  80 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுகளிலும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி, கிண்டி பொறியியல் கல்லூரி, எஸ்எஸ்என் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. இரண்டு கட்ட கலந்தாய்வுகளிலும் சேர்த்து தற்போது வரை 27,740 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு  தெரிவித்திருந்தது.

மேலும், மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கில் 49,043 மாணவர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு சுற்றுகளில் காலியாக உள்ள 1,11,511 இடங்களுக்கு 1,10,701 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தமுள்ள 446 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகள் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பின.

கடந்த ஆண்டு, மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, ஒன்பது கல்லூரிகள் அனைத்து இடங்களும் நிரப்பின.90 சதவீத இடங்களுக்கு மேல் நிரம்பிய 33 கல்லூரிகளில் 17 தனியார் கல்லூரிகள். 173 கல்லூரிகளில் 10% க்கும் குறைவான இடங்களே நிரப்பியுள்ள நிலையில், சனிக்கிழமை முடிவடைந்த மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு 25 கல்லூரிகளில் ஒரு இடங்கள் கூட நிரப்ப முடியவில்லை.

100% சேர்க்கை பெற்ற மூன்று கல்லூரிகள் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி, பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி.

இந்த ஆண்டு மூன்று சுற்றுகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகள் அதிகமானோர் சேர்க்கை பெற்றுள்ளதால், பிற துறையைச் சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை இல்லாதது தமிழக கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது. . சமீப காலமாக பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருவது கல்வி வளர்ச்சியில் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.