புதுடெல்லி: “நான் பயங்கரவாதியும் இல்லை; ஊழல்வாதியும் இல்லை” என்று பாஜகவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கியப் போட்டியாளராக உருவெடுத்துள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதோடு, டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலும் நடைபெற உள்ளதால் அங்கும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லி அமைச்சர்களுமான மணிஷ் சிசோதியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி விசாரணை வளையத்தில் உள்ளதை சுட்டிக்காட்டி பாஜக தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியை ஊழல் கட்சி என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பதிவு இட்டுள்ளார்.
அதில், அரவிந்த் கேஜ்ரிவால் கூறி இருப்பதாவது: “பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, என்னை பயங்கரவாதி என கூறினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தூண்டுதலின் பேரில் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், என்ன ஆனது? தற்போது, குஜராத் தேர்தல் மற்றும் டெல்லி உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாஜகவினர் என்னை ஊழல்வாதி என்கின்றனர்.
கேஜ்ரிவால் பயங்கரவாதியாகவோ அல்லது ஊழல்வாதியாகவோ இருந்தால் கைது செய்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால், ஏன் செய்யவில்லை? ஏனெனில், நான் பயங்கரவாதியும் இல்லை; ஊழல்வாதியும் இல்லை. மக்களின் மனதுக்கு நெருக்கமானவன். அதுதான் பாஜகவுக்கு பிரச்சினையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ல் இருந்து டெல்லி மாநகராட்சி பாஜக வசம் உள்ளது. கடைசியாக கடந்த 2017-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 181 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 27 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. தற்போது டெல்லியின் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கானத் தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இதேபோல், குஜராத்தில் கடந்த 1998-ல் இருந்து தொடர்ந்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.