பத்திரிகையாளர்களை அவமதிப்பதா..? – கேரள ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வலியுறுத்தி உள்ளார்.

கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தமாக உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

இதற்கிடையே நேற்று, கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், கொச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டேன் என்றார். மேலும், அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற சொன்னார். ஆளுநர் ஆரிப் முகமது கானின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கேரள மாநில ஆளுநர் மாளிகைக்கு கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய பேரணியை அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சில ஊடகங்களை மட்டும் வெளியேற்றிய ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. ஊடகத் தடை என்பது ஜனநாயக இந்தியாவுக்கே அவமானம். மக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் முக்கியமானது.

ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் இடத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. கேரள ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு முரணான செயல்களைச் செய்து, பிரபலமாக இருக்கவும் செய்திகளை உருவாக்கவும் முயற்சிக்கிறார். ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் செயலகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. இழந்த உரிமைகளை மீட்டெடுக்க பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் உள்ளே நுழைந்தால் செயலகம் இடிந்து விடுமா? ஊடகவியலாளர்களுக்கு செயலகத்துக்குள் நுழையும் உரிமை மறுக்கப்படக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.