பயங்கரவாதத்திற்கான நிதி தடுப்பு நடவடிக்கை: இந்தியா தலைமையில் அடுத்த வாரம் டெல்லியில் சர்வதேச மாநாடு

புதுடெல்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகள் குறித்து ஆராய்வதற்கான சர்வதேச இரண்டு நாள் மாநாடு அடுத்த வாரம் புதுடெல்லியில் நடைபெற இருக்கிறது.

ஃபைனான்ஷியல் இன்டெலிஜென்ஸ் யூனிட்ஸ் (Financial Intelligence Units – FIU) எனும் சர்வதேச அமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி செல்லும் வழிகளை கண்டறிந்து தடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த அமைப்பு இந்த நோக்கத்திற்காக சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் முதல் மாநாடு கடந்த 2018-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. இரண்டாம் மாநாடு 2019-ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மூன்றாவது மாநாடு 2020-ல் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், கரோனா பெருந்தொற்று காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அந்த மாநாடு அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளதாக FIU-ன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 மாநாட்டில் 65 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள மாநாட்டில் FIU-ன் அமைப்பான எக்மோண்ட் குரூப்பில் உள்ள உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிப்டோ கரன்சி மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது, பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பவர்களுக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைப்பது, பயங்கரவாத அமைப்புகள் சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவு திரட்டுவதைத் தடுப்பது ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு பயங்கரவாதமே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை மையப்புள்ளியாகக் கொண்டு, அதற்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.நா பாதுகாப்பு அவையின் பயங்கரவாத தடுப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த அக்டோபர் 29-ல் இந்தியாவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடாக இந்த மாநாடு திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.