மதுரை: “புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் அதனை வெவ்வேறு பெயர்களில் சொன்னாலும்கூட அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது: “மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் இன்று ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளனர். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பணியாற்றாமல், 365 நாட்களும் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட பூத் கமிட்டியை இன்று தொடங்கியிருக்கிறோம். இது ஒரு சிறந்த முன்னெடுப்பு” என்றார்.
அப்போது அவரிடம் புதிய கல்விக் கொள்கையால் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பேசியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அமைச்சர் பொன்முடி அவர்கள் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 2019 வரை இந்தி என்பது கட்டாய மொழியாக திணிக்கப்பட்டிருந்தது. 1986-ம் ஆண்டு வந்த இரண்டாவது கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமாக்கப் பட்டிருந்தது. இவர்கள் 10 வருடம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தபோதும்கூட இந்தி என்பது கட்டாய பாடமாகத்தான் இருந்தது.
2020-ல் புதிய கல்விக் கொள்கை வந்தபிறகுதான், இந்தி என்பது விருப்பப் பாடமாக கொண்டுவரப்பட்டது. இந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக்கூடாது என்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம். பாஜகவின் விருப்பமும் அதுதான். எனவேதான் மூன்றாவது மொழி என்பது விருப்பப்பாடமாகும் என்று தமிழகம் வரும் மத்திய இணை அமைச்சர்கள் சொல்கின்றனர், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ‘இல்லம் தேடி கல்வி’ அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கின்ற ஒரு அம்சம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெயரை மட்டும் மாற்றுகின்றனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைதான் இன்னொரு பெயரில் வருகிறது. நம்மைப் பொருத்தவரை அது எந்த பெயரில் வந்தாலும் சரி மக்களுக்கு நல்லது நடந்தால் போதும். ஆனால் அமைச்சர் பொன்முடி அவர்கள் ஆரம்பத்தில் ஒன்றுமே வேண்டாம் எனக்கூறிவிட்டு, இன்றைக்கு பாஜகவின் கொள்கைக்கு நேராக வந்துள்ளனர். இந்தி திணிப்புக் கூடாது அதேதான் பாஜகவும் சொல்கிறது. அதுதான் புதிய கல்விக் கொள்கையும் சொல்கிறது. மத்தியப் பிரதேசத்தில் மருத்துவப் படிப்பை இந்தியில் கொண்டுவந்தபோது, பாஜகதான் முதலில் குரல் கொடுத்தது. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் கொண்டுவர பாஜக குரல் கொடுத்தது.
தமிழகத்தில் பொறியியல் பாடத்தை முழுமையாக தமிழில் படிக்கக்கூடியவர்கள் 69 பேர் மட்டுமே. தமிழ்வழி பொறியியல் படிப்பு 5 கல்லூரிகளில் மட்டும்தான் உள்ளது. இந்தநிலை இருக்கும்போது, தமிழை என்ன வளர்த்துவிட்டீர்கள்? எப்படி தமிழ் வளரும்? பாஜக ஆட்சியில்தான் இந்தி என்பது கட்டாயம் இல்லை. 3 மொழிகளைப் படிக்கவும், மூன்றாவது மொழி விருப்பப்பாடம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதை மாநில அரசு நடைமுறைப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். வெவ்வேறு பெயர்களில் சொன்னாலும்கூட அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று அவர் கூறினார்.