புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மீனவர் வலையில் ராக்கெட் வெடிகுண்டு சிக்கியது. அதனை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அடுத்த மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் கணேசன்(50), வடிவேல்(40). இவர்கள் 2 பேரும், நேற்று முன்தினம் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் இருவரும் கடலில் சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் பிடித்து வந்த மீன் மற்றும் நண்டுகளை வலையில் இருந்து எடுத்து பாசிகளை சுத்தம் செய்யாமல் வலையை கடற்கரையில் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
நேற்று காலை மீனவர்கள் 2 பேரும், வலையில் சிக்கியிருந்த பாசிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அதில் ராக்கெட் லாஞ்சர் (குண்டு) இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராக்கெட் குண்டை கைப்பற்றினர். பின்னர் அதை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று வைத்துள்ளனர். ராக்கெட் குண்டு கிடைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ராணுவ பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் குண்டாக இருக்கக்கூடும். பயிற்சியின் போது அது வெடிக்காமல் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.