பெரும்போகத்தில் நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை விநியோகிக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெல் மற்றும் இதர பயிர்களுக்குத் தேவையான பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை கமநல அபிவிருத்தித் திணைக்களம் அதன் நிதியில், தனியார் துறையிடம் இருந்து கொள்வனவு செய்யும்.
அதன்பின், அந்த நிறுவனங்கள் வழங்கும் விலை கழிவின்படி, அனைத்து பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளும், குறிப்பிட்ட விலையில், 5 அல்லது 6 சதவீத விலை குறைப்பில், கமநல சேவை மையயங்களினூடாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. விற்பனை மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி விவசாயிகள் அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்றும் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர கமல அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.