உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தற்போது பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதுவரை மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 4-வது சுற்று வருகிற 14-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரையில் மட்டும் 89,585 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் கலந்தாய்வில் மூலம் 80,383 பேர் சேர்ந்தனர். ஆனால் அதை விட இந்த வருடம் 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து நான்காவது சுற்றிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதையடுத்து, காலியாக உள்ள இடங்களுக்கு துணை கலந்தாய்வும் நடைபெறும். பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளதால், கல்லூரி ஆசிரியர்கள் நான்காயிரம் பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கூடிய விரைவில் தொடங்கும்.
இதைத்தொடர்ந்து, 5 வருடமாக நடைபெறாமல் இருந்த ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு இன்று ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது. மொத்தம் 5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது மூன்று ஆயிரம் காலி இடங்கள் உள்ளதனால், ஆசிரியர்கள் விரும்பிய இடங்களை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் காலி இடங்களுக்கு இடம் மாறுதல் வழங்கப்படும்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.