போலி மருத்துவ சான்று வைத்து இழப்பீடு தராமல் ஏமாற்றிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் போலி மருத்துவ சான்றுக் காட்டி இழப்பீடு தராமல் ஏமாற்றிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த வாரம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

2016 ம் ஆண்டு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அனில் தேசாய் என்ற 19 வயது வாலிபர் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மரணத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது தாயார் சாவித்ரி தேசாய் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை நாடினார்.

ஆனால் அனில் தேசாய் ஏற்கனவே நோய்வாய்பட்டிருந்ததாகவும் அதனை மறைத்து காப்பீடு பெற்றுள்ளதாகவும் கூறி இழப்பீடு வழங்க முடியாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதனை அடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாடிய சாவித்ரி இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

2015 ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதி ஆக்ஸா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ. 10 லட்சத்திற்கான காப்பீட்டை அனில் தேசாய் வாங்கியுள்ளார்.

பின்னர் 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள ஷிஃபா கிளினிக்-கில் மருத்துவர் எம்.ஏ. ஷேக் என்பவரிடம் வைத்தியம் பார்த்துள்ளார்.

மேலும் சில பரிசோதனைகள் எடுக்க வேண்டியுள்ளதாக கூறி அவரை ஆகஸ்ட் 31 ம் தேதி வீட்டிற்கு அனுப்பிய நிலையில் செப்டம்பர் 1 ம் தேதி மரணமடைந்தார்.

இதனை அடுத்து அனில் தேசாயின் தாயார் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழங்கிய மருத்துவ சான்றிதழில் அனிலுக்கு ஏற்கனவே நோய் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சாவித்ரி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர் எம்.ஏ. ஷேக்-கிடம் நடைபெற்ற விசாரணையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து சிலர் தன்னிடம் எதுவும் எழுதப்படாத லெட்டர் ஹெட்-களை வாங்கிச் சென்றதாக கூறினார்.

ஷேக்-கின் சாட்சியத்தை அடுத்து அந்த குறிப்பிட்ட மருத்துவ சான்றிதழில் இருந்த கையெழுத்தும் மற்ற ஆவணங்களில் இருந்த கையெழுத்தும் வேறு மாதிரியாக இருந்தது தெரியவந்தது.

மேலும், நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அனில் தேசாயின் கையெழுத்தும் ஆயுள் காப்பீடு நிறுவனம் வழங்கிய ஆவணங்கள் மாறுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இழப்பீடு வழங்குவதை தவிர்க்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது இதன் மூலம் தெரியவந்தது.

இதனை அடுத்து 10 லட்ச ரூபாய் இழப்பீட்டை 2016 ம் ஆண்டு முதல் 8 சதவீத ஆண்டுவட்டி மற்றும் IRDAI விதிகளின் படி மேலும் 2 சதவீதம் வட்டி சேர்த்து சாவித்ரி தேசாய்க்கு வழங்க வேண்டும் என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

தவிர போலி ஆவணங்கள் தயாரித்து இழப்பீடு கோரியவரை ஏமாற்ற முற்பட்டதாக 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் லாபமீட்டி வரும் நிறுவனம் இது போன்ற ஒரு அப்பட்டமான மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் வெறும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்திருப்பது ஏற்புடையதல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.