ஹைதராபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம்தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் கடந்த 24–ம் தேதி தெலங்கானா வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் தெலங்கானாவில் 3 நாள் ஓய்வு நீங்கலாக 12 நாட்கள் அவர் நடைபயணம் மேற்கொண்டார். இந்நிலையில் ராகுல் நேற்று மாலையில் தெலங்கானாவின் கமரெட்டி மாவட்டம் வழியாக மகாராஷ்டிர எல்லையை அடைந்தார். அப்போது இரு மாநில எல்லையில் தேசியக் கொடியை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலிடம் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஒப்படைத்தார்.
முன்னதாக, யாத்திரை மேற்கொண்டுள்ளவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் பொதுக்கூட்டம் மெனூரு கிராமத்தில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறும்போது, “தெலங்கானாவில் பாரத ஒற்றுமை யாத்திரை, மக்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் என அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்று ராகுலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்” என்றார்.