மாறுபட்ட பாதையில் பயணிக்கிறோம்.. முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்..!

திமுகவும், அதிமுகவும் அண்ணன் – தம்பி இயக்கம் தான்; ஆனால், நாங்கள் மாறுபட்ட பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பாதை எம்ஜிஆர் காட்டிய பாதை. அதில் பயணிக்கிறோம் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுகவின் முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் தஞ்சையில் காலமானார். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “அதிமுகவை பொறுத்தவரை, தொண்டர்களுகாக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார் எம்ஜிஆர். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்.

தொண்டர்களின் நலனுக்கான இந்த இயக்கத்தின் 50 ஆண்டு பரிணாம வளர்ச்சிதான் இப்போது இருக்கிறது. தொண்டர்களை எந்த நேரத்திலும் பிளவுபடுத்தி பார்க்க முடியாத வகையில் தான் நிலைத்து நிற்கிறது. அதிமுகவில் எந்தவித சிறுசேதமும் இல்லை. சிறு சிறு பிரச்சினைகள் இடையில் வரும், அது சரியாக போய்விடும்.

அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதிமுக தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது. அது, போகப் போக சரியாகி விடும். தமிழகம் வரும் பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். அதிமுக உடன் கூட்டணி வைக்க தயார் என்கிற டி.டி.வி.தினகரனின் கருத்து நல்ல கருத்து; இதை வரவேற்கிறோம். வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்திப்பேன்.

திமுகவும், அதிமுகவும் அண்ணன் – தம்பி இயக்கம் தான்; ஆனால், மாறுபட்ட பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பாதை எம்ஜிஆர் காட்டிய பாதை. அதில் பயணிக்கிறோம். அதிமுக இடத்தை பாஜக பிடிக்கப் பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவின் ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை.

அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தொண்டர்களை யாராலும் பிளவுபடுத்தி பார்க்க முடியாது, அது நடக்காது. பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். எங்களை பொறுத்தவரை, ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதைதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக சட்ட விதியை எம்ஜிஆர் உருவாக்கினாரோ அதில் சின்ன மாசோ, பங்கமோ ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தர்மயுத்தத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.