திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அத்தோளி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். அவரது மகன் பிரசாந்த் (26). ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு தலை முடி கொட்டத் தொடங்கியது. பல டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்தநிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 6 வருடமாக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார். அங்குள்ள ஒரு டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு வந்தார். ஆனால் அதன் பிறகும் கூடுதலாக பிரசாந்துக்கு முடி உதிரத் தொடங்கியது. தலைமுடி மட்டுமல்லாமல் புருவத்தில் இருந்த முடி கூட உதிர்ந்தது.
இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். திருமணமும் தடைபட்டது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரசாந்த் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். அதில், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தான் என்னுடைய தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து பிரசாந்தின் உறவினர்கள் அத்தோளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் டாக்டரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பிரசாந்தின் உறவினர்கள் கோழிக்கோடு கூடுதல் எஸ்பியிடம் புகார் கொடுத்து உள்ளனர்.