திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே காந்தி ரோட்டில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கு திருத்தணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால், சில மாணவர்கள் வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பை புறக்கணித்து விட்டு ரெயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மகிழ்ச்சியாக சுற்றித் வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இந்த பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் திருத்தணி மலைக் கோவிலில் சுற்றி வந்தனர்.
அப்போது அந்த மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை பார்ப்பதற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு வெளியில் சுற்றியது தெரியவந்தது.
அதன் பின்னர், மாணவர்கள் மூன்று பேருக்கும் சுமார் 15 முறை தோப்புகரணம் போடும்படி நூதன தண்டனை கொடுத்துள்ளனர். ஒருவர் காதை மற்றொருவர் பிடித்தபடி அவர்கள் மூன்று பேரும் தோப்புகரணம் போட்டதுடன், இனிமேல் பள்ளிக்கு ஓழுங்காக செல்வேன் என்றும் அவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு அலுவலர் மாணவர்கள் மூன்று பேரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இந்த நூதன தண்டனையை கோவிலுக்கு வந்த சில பக்தர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.