ஈரோடு: வைகோ குறித்த ஆவணப்படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை, என மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
ஈரோட்டில் மதிமுக சார்பில், ‘மாமனிதன் வைகோ’ எனும் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகோவின் தொண்டு, சாதனைகளை வெளிப்படுத்தவே ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இதில், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அதிமுகவை திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை. அவர் களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கமோ, சிந்தனையோ எங்களுக்குக் கிடையாது.
பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே கொழுப்பு நிறைந்த ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் பாலின் விலை உயரவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம். இதில் மாற்றமில்லை. தமிழகத்தில் ராகுல்காந்தி நடைபயணம் தொடங்கியபோது, ஆவணப்பட தயாரிப்பு பணியில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
அதனால், தற்போது தெலங்கானாவில் அவரைச் சந்தித்தேன். வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சி தலைமையும், கூட்டணித் தலைமையும் முடிவெடுக்கும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சில சமயங்களில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது. சமீபத்திய இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக தாங்கள் ஏற்கெனவே வென்ற இடங்களை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில், மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும், என்றார். நிகழ்ச்சியில், வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, எம்பி-க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.