பெங்களூரு:”ஹிந்து என்பது இந்திய வார்த்தை கிடையாது. இது பாரசீகத்தில் ஆபாச வார்த்தை,” எனக் கூறியதில் தவறில்லை. 100 கணக்கான ஆதாரங்கள் உள்ளன என காங்கிரஸ் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி நிப்பாணியில் நேற்று முன்தினம்(நவ.,6) இரவு மனித உறவு கமிட்டி சார்பில் ‘வீடுதோறும் புத்தர், பசவா, அம்பேத்கர்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோளி பேசிய தாவது:
ஹிந்து’ என்பது இந்திய வார்த்தை அல்ல. அது பாரசீக மொழியை சேர்ந்தது. பாரசீக மொழியில், அது ஆபாச வார்த்தையாகும். இந்தியாவுக்கும், பாரசீகத்துக்கும் என்ன சம்பந்தம். ‘ஹிந்து’ எனும் வார்த்தை நமக்கு எப்படி சொந்தமானது என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். எங்கிருந்தோ வந்த மதத்தை கொண்டு வந்து வலுக்கட்டாயமாக புகுத்துகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கண்டனம்
கர்நாடக காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சதீஷ் ஜார்கிஹோளியை கண்டித்து உள்ளார். சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில், ‘ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை நடைமுறை. ஒவ்வொரு மதத்தின் நம்பிக்கையையும் மதித்து, நாட்டை உருவாக்கும் பணியை காங்கிரஸ் செய்துள்ளது. சதீஷ் ஜார்கிஹோளியின் பேச்சு துரதிர்ஷ்டவசம். அதை வன்மையாக கண்டிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
புராதனமானது
ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியதாவது:சதீஷ் ஜார்கிஹோளியின் பேச்சை கண்டிக்கிறேன். ஹிந்துக்களை அவமதித்தது சரியல்ல. அவர் ஹிந்துகளுக்கு எதிரி; நாத்திகர். ஹிந்துக்களை பற்றி பேசும் உரிமை, அவருக்கு இல்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஹிந்து வார்த்தை மிகவும் புராதன மானது. கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே, ஹிந்து என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ.,வும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சமூக வலைதளங்களில் பலரும் சதீஷ் ஜார்கிஹோளியை வசைபாட துவங்கினர்.
இந்நிலையில் இன்று (நவ.,8) சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், நான் சொல்லியதில் எந்த தவறும் இல்லை. ஹிந்து என்ற பாரசீக வார்த்தை எப்படி வந்தது என்பது குறித்து நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் ‘சத்யார்த்த பிரகாசா’ புத்தகத்திலும், டாக்டர் ஜிஎஸ் பாட்டீலின் ‘ பசவ பாரதா’ புத்தகத்திலும் மற்றும் பால கங்காதர் திலகரின்’ கேசரி’ நாளிதழிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வெறும் 3 உதாரணங்கள் தான். இதே போன்று விக்கிபீடியா மற்றும் இணையதளங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதனை படித்து பாருங்கள் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement