புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியதை மறக்க முடியாதது என்று ஓய்வு பெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பதவியேற்றார். அவரின் பணிக் காலம் இன்றுடன் (நவ. 8) நிறைவடைகிறது. ஆனால் இன்று குருநானக் ஜெயந்தியையொட்டி, உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு நேற்று கடைசி பணி நாளாக அமைந்தது.
இதையொட்டி, அவர் தலைமையில் கூடும் சிறப்பு அமர்வின் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்ற வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு கூடிய அந்த அமர்வில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பேலா எம்.திரிவேதி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அப்போது தலைமை நீதிபதி யு.யு. லலித் பேசியதாவது:
உச்ச நீதிமன்றத்துக்கும் எனக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.சுமார் 37 ஆண்டுகள் இந்த நீதிமன்றத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன். இதை மறக்க முடியாது. இந்த காலம் முழுமையையும் நான் அனுபவித்து பணியாற்றினேன்.
வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய நான் தலைமை நீதிபதியாக ஓய்வு பெறுகிறேன். தற்போது என்னுடைய பணியை, நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம் வழங்குகிறேன்.
முதலாவது நீதிமன்றத்தில் எனது பணியை அப்போதைய பம்பாயில் தொடங்கினேன். தற்போது எனது பணியை முதலாவது நீதிமன்றத்திலேயே முடிந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அடுத்து தலைமை நீதிபதியாக பணியாற்றப் போகும் டி.ஒய்.சந்திரசூட், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் உள்ளிட்டோர் யு.யு.லலித்துக்கு புகழாரம் சூட்டினர்.
2014-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித்,உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பதவியேற்றார். சுமார் இரண்டரை மாதங்கள் மட்டுமே அவர் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.