பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கல்வி, அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியலமைப்புத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.
சமீபத்திய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் நரேந்திர மோடி அரசு தனது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 2005-06-ல் டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட செயல்பாட்டின் விளைவாக, 2010 ஜூலையில் சின்ஹோ கமிஷன் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, பரவலான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 2014-க்குள் மசோதா தயாராகிவிட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.