வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து வரும் இடைக்கால தேர்தலில் ஜனநாயக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும். அதாவது, புதிய அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் கழித்துதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் ஜோ பைடன் அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ,தற்போது அமெரிக்க இடைக்கால தேர்தல் நடந்து வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை), செனட் சபை (மேலவை) என இரு அவைகளை கொண்டுள்ளது. இதில் பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களுக்கும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது
அந்த வகையில் இன்று தொடங்கிய வாக்குப் பதிவில் பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி பிரதிநிதிகள் சபையில் 199 இடங்களில் குடியரசுக் கட்சியும், 172 இடங்களில் ஜனநாயகக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவைப்படுகின்றன.
அதிகாரமிக்க செனட் சபை எனப்படும் மேலவையில் இரு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஜனநாயகக் கட்சியின் 46 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியின் 47 உறுப்பினர்களும் முன்னிலை வகித்து வருகிறார்கள்.
செனட் சபையில் கடந்த சில வருடங்களில் குடியரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், இம்முறை ஜோ பைடன் தலைமை வகிக்கும் ஜனநாயகக் கட்சி கடும் போட்டியை குடியரசுக் கட்சிக்கு அளித்து வருகிறது. இதில் செனட் சபையில் மீண்டும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றால், 2024-ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.