சென்னை: எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்யப்படும் என்றும், மனிதவள சீர்த்திருத்தக் குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு தமிழக முதல்வரிடம் இன்று (09.11.2022) மனு அளித்தனர்.
அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதல்வர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ள அதேவேளையில், சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓர் இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம். அதனால், நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும் அவசியமாகிறது. பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை இவ்வாண்டு தொடங்கியுள்ளோம்.
மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறுமாத கால அளவிற்குள் முன்மொழிவதற்கான மனிதவள சீர்த்திருத்தக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டி 5 பேர் அடங்கிய ‘மனிதவள சீர்திருத்தக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது’ அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > ‘அவுட்சோர்சிங், தனியார்… அரசாணை எண் 115-ஐ ரத்து செய்யக் கோருவது ஏன்?’ – அரசு ஊழியர்கள் சங்கம் விளக்கம்