சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரி கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், கரோனா பாதிப்புக்குப் பின், குரங்கு அம்மை, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்மயமாகுதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வன அழிப்பு, மனிதர்களின் சமூக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாகத்தான் புதிய நோய்கள் பரவுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம், வெள்ளம், வறட்சி முதலான இயற்கைச் சீற்றங்கள் காரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுவதாகவும் நோய் தொற்றியவர்களைக் கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதி, அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார்.
இதுசம்பந்தமாக உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், தான் வழக்கறிஞராக இருந்தபோது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற போது, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லை என நர்ஸ் தெரிவித்ததாகவும், பிறகு மருத்துவர் வலியுறுத்திய பின், அந்த மருந்து தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதாகவும், அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார்.
காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் காலாவதி மருந்து விநியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதியையும் உருவாக்கவேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறையை வகுப்பது, புகார் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாகாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கையை அரசு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், “அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியாகாத மருந்துகளை வழங்க ஏதுவாக, கொள்முதல் முதல் விநியோகம் வரை, பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.தேவைக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் மருந்துகள் இருந்தால் அவை தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லாவிட்டால் புகார் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளில், விற்பனைக்கு அல்ல என்று அச்சிடப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்று பயன்படுத்த வாய்ப்பில்லை. காலாவதியான மருந்துகளை திரும்பி பெற வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
அரசு மருத்துவமனை மருந்துகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை குறித்து திருப்தியும், பாராட்டும் தெரிவித்த நீதிபதி, இதை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், நாட்டில் பிற மாநிலங்களில் இல்லாத மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் எனவும் யோசனை தெரிவித்து, விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.