டிஐஓஎல் நிறுவன விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவரும், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியது:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1991 இல், நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு லரப்பட்டது.
தாராளமயமாக்கல் மூலம் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்தைத் கொண்டு வந்து இந்தியா பொருளாதாரத்தில் புதிய பாதையில் பயணிக்க வழிவகுத்தவர் மன்மோகன் சிங். அவருக்கு இந்த ஒட்டுமொத்த தேசமே கடமைப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஏழைகளுக்குப் பயன்தரக்கடிய தாராளப் பொருளாதாரக் கொள்கை தேவை.
தாராளமயமாக்கல் கொள்கை ஒரு நாட்டை எப்படி மேம்படுத்தும் என்பதற்கு சீனா ஒரு சிறந்த உதாரணம். பொருளாதாரக் கொள்கையை விரைவுபடுத்த நாட்டின் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம்.
சாலைக் கட்டுமானப் பணி திட்டங்களுக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை பொது மக்களிடம் நிதி திரட்டி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நாடு முழுவதும் 26 பசுமை நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது.
இந்த துறையில் நிதிப்பற்றாக்குறை இல்லை. தற்போது சாலை நுழைவு வரியாக ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது 2024 இல் 1.4 லட்சம் கோடியாக உயரும் என்று நிதின் கட்கரி கூறினார்.
மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட தினமான நவம்பர் 8 ஆம் தேதியை சமூக லலைதளங்களில் பலர் கருப்பு தினமாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியி்ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, பாஜக மூத்த அமைச்சர் நிதின் கட்கரி புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.