ஆன்லைன் ரம்மியை மிஞ்சும் `லோன் ஆப்ஸ்’ – விழித்துக்கொள்ளுமா அரசு?!

சமீப காலமாக  ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செல்போன்  செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும், குறைந்த வட்டி, ஈசி அக்சஸ் போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களிடம் எளிதாக நுழையும் இந்த கடன் செயலிகள், இப்போது ஆன்லைன் ரம்மியை விடக் கொடூரமான ஒன்றாக மாறி வருகிறது. அதாவது, பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் போன்றவர்களைக் குறி வைத்து இது போன்ற கடன் செயலி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

லோன்

தனிநபர் ஒருவரின் ஆதார், செல்போன் எண் போன்ற தகவல்களைத் தருவதன் மூலமாக தனிநபர் கடன் எளிதாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் செயலி மூலம் கடன் பெறுபவரின் மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்கின்றனர். பணம் தாமதமாக கட்டினாலோ அல்லது நிறுவனம் சொல்லும் கூடுதல் பணத்தை கட்டத் தவறினாலோ கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றது.

இதனால் தற்கொலை சம்பவங்களும் நடக்கின்றன. நாடு முழுவதும் இதுபோன்ற குற்றம் அதிகமாகி வருகிறது. இதுபோன்ற புகார்களினால் ஏராளமான சீன கடன் செயலிகளை மத்திய அரசு கடந்த மாதம் தடை செய்தது.

தற்கொலை

கடந்த ஜூன் மாதம் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்று திருப்பி செலுத்தாததால் அவரின் படத்தை  ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் நிறுவனம், அவரின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால், மனமுடைந்த பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், அக்டோபர் 3-ம் தேதி லோன் ஆப்பில் கடன் பெற்ற கே.கே.நகரைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் நரேந்திரன் என்பவரும் ஆபாச மிரட்டல்களால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில், சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த உஷ்னா என்பவர் அவசர கடன் வழங்கும் கடன் செயலிகளை பதிவிறக்கி ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

ரிசர்வ் வங்கி

10 நாள்களில் அவர் வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்தினார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனம், மேலும் ரூ.50 ஆயிரம் கட்ட நிபந்தனை விதித்தது. பணத்தை கட்ட உஷ்னா மறுக்கவே அவரின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து உஷ்னா அளித்த புகாரின்படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸார், அந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதுபோல் நடந்துள்ளது. இதேபோல், சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆன்லைன் கடன் செயலிகளுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதில் அளிக்க ஆணை பிறப்பித்தனர். 

வினோத் ஆறுமுகம்

ஆன்லைன் ரம்மியை காட்டிலும் கொடூரமான ஒன்றாக  லோன்  ஆப்கள் மாறி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இதுகுறித்து, சைபர் சமூக ஆர்வலர் வினோத் ஆறுமுகம் நம்மிடம், “ரிசர்வ் வங்கியின் அனுமதி  பெற்றிருந்தால்  மட்டுமே  லோன்  கொடுக்க முடியும். இதுபோன்ற கடன் செயலிகளை குளோன்  ஆப் என்று சொல்வார்கள். ஒருநபர் வைத்திருக்கும் ஆப்  விவரங்களை  குளோன் செய்து வேறு ஒரு பெயரில் ஆப் என்று இணையத்தில் வெளியிட முடியும். இந்த ஆப்களுக்கு ‘மால்வேர்’ இல்லை என்பதால் கூகுள்பிளே ஸ்டோரில் எளிதாக சென்றுவிடும். பின்னர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக மக்களை டார்கெட்  செய்வார்கள். இதுதான் அவர்களின் திட்டமிடலாக இருக்கும். கூகுள் பிளே ஸ்டோர் நிறுவனத்திடம் அரசு இதுபோன்ற கடன் செயலிகளை ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெறப்பட்டதா என்று ஆய்வு செய்ய அலுத்தம் கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கியும், அரசும் இதுபோன்ற ஆன்லைன் கடன் செயலி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். லோன் கொடுத்தவர்கள் மிரட்டும் போது பொதுமக்கள் சைபர் கிரைமிலும், போலீஸிலும் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும். ஆன்லைன் கடன் செயலி குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். 

கடன் செயலி மோசடியால் மேலும் ஒருவர் பாதிக்கும் முன்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.