திருவனந்தபுரம்: மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கேரள அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் சூழலில் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவினை நிறைவேற்ற பினராயி அரசு முனைப்பு காட்டி வருகிறது.
ஆளுநர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து வரும் 15ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கேரள அரசு அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்த ஆளுநர் ஆரிப் அரசுடனான பொது விவாதத்தில் தயார் என்றும் ஆளுநர் மாளிகைக்கு வந்து பாருங்கள் என்றும் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் ஆளுநருக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்றால் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளை கவிழ்க்க ஆளுநர் மூலமாக சூழ்ச்சி நடைபெறுவதாக ஆளுநர் கூறி இருக்கிறார்.
பாஜக அரசின் குதிரை பேரம் தோல்வியில் முடிந்தால் மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது நாட்டில் ஜனநாயக அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடப்பதை உணர முடிகின்றது என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.