இங்கிலாந்தில் மாங்காய் ஊறுகாய் சாப்பிட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்குட்படும் அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதனால், மருத்துவமனைகளில் புதிய நெறிமுறைகள் வகுக்கும் அளவுக்கு பிரச்சினை பெரிதாகியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள Epsom என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற பெண் ஒருவர், தனக்கு உணவுப்பொருட்களை விழுங்குவதில் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஒருவர், அவரது தொண்டையில் எதுவும் தெரியவில்லை என்றும், அது தொண்டையில் ஏற்பட்ட சிறு கீறலாகவோ அல்லது குடலில் ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாகவோ இருக்கலாம் என்று கூறி, உடல்நிலை மோசமானால் மீண்டும் மருத்துவமனைக்கு வருமாறும் கூறி அனுப்பியுள்ளார்.
ஆனால், நான்கு நாட்களுக்குப் பின் sepsis என்னும் மோசமான பிரச்சினையின் அறிகுறிகளுடன் மீண்டும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் அந்தப் பெண்.
Source: telegraph.co.uk
தொண்டையில் வீக்கம், தொற்று, உணவை விழுங்கமுடியாமை என்னும் பிரச்சினைகளுடன் அவர் மீண்டும் வந்தபோதும், அவரது தொண்டையில் எதுவும் சிக்கியிருப்பதாக மருத்துவர்களுக்குத் தெரியவில்லை.
ஆகவே, வேறு சில மருத்துவமனைகளுடன் ஆலோசித்தபின், Guildford என்னுமிடத்திலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் அந்தப் பெண். அங்கே அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அப்போதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை தெரியவந்தது. அந்தப் பெண் மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டபோது, அந்த ஊறுகாயில் இருந்த மாங்கொட்டை ஒன்றின் மெல்லிய துண்டு ஒன்று அவரது தொண்டையில் குத்தியிருக்கிறது.
வழக்கமாக மீன் முள், கோழிக்கறி சாப்பிடும்போது அதிலுள்ள சிறிய எலும்பு ஒன்று, ஆகியவற்றால் பிரச்சினை ஏற்படலாம் என்பதும், அப்படி ஏதாவது தொண்டையில் குத்தியிருந்தால் என்ன செய்வது என்பதற்கும் மருத்துவத்தில் நெறிமுறைகள் உள்ளன.
ஆனால், மாங்கொட்டைத் துண்டு தொண்டையில் சிக்கினால் என்ன செய்வது என்பதற்கு நெறிமுறைகள் இல்லை. ஆகவே, இப்போது மருத்துவமனை நெறிமுறைகளில் மாங்கொட்டை தொடர்பிலும் புதிதாக நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தொண்டையில் மாங்கொட்டை சிக்கிய அந்தப் பெண் அறுவை சிகிச்சை மற்றும் அதற்குப் பின்னான ஒருவார மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின் பூரண குணமடைந்துள்ளார்.
ஆனாலும், மருத்துவமனை அறக்கட்டளை மீது அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.