கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தார். அப்போது களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கி பழகிவந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கிடையே கிரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து தீர்த்துக் கட்டினார். அதாவது காதலனுக்கு தெரியாமல் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் அவருடைய உடல்நிலை கொஞ்சம், கொஞ்சமாக மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வித்தியாசமான கொலை சம்பவம் குமரி-கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 25-ம் தேதி ஷாரோன்ராஜ் இறந்தநிலையில் பாறசாலை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 30-ம் தேதி போலீசார் கிரீஷ்மாவை வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்றதை ஒப்புக் கொண்டார். தன்னுடைய எதிர்கால திருமண வாழ்க்கைக்கு காதலன் இடைஞ்சலாக இருப்பார் என கருதி அவரை தீர்த்துக் கட்டியது அம்பலமானது.
இதற்கிடையே தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் கிரீஷ்மாவிடம் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தவில்லை.
பின்னர் கிரீஷ்மா உடல்நிலை தேறியதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவர் அட்டக்குளங்கரை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கிரீஷ்மாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 7 நாட்கள் கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு போலீசாருக்கு அனுமதி வழங்கியது. மேலும் விசாரணை நடைமுறை மற்றும் கொலை நடந்த இடத்திற்கு கிரீஷ்மாவை அழைத்து சென்று விசாரணை நடத்தும் போது அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அதனை சீலிட்ட கவரில் வைத்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், ஷாரோனின் கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதிக்கு கிரீஷ்மாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 மாதங்களில் காதலன் ஷாரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.