ஊட்டி : உதகமண்டலம் அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாட புலி சுற்றி திரிவதால் ஆட்கள் யாரும் தனியாக வெளியே வரவேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளது. உதகை அருகே இந்து நகர் பகுதியில் கடந்த வாரம் பசு மாடு ஒன்றை புலி அடித்து கொன்றது. வேட்டையாடி விட்டு புலி அமர்ந்து இருந்ததை கண்ட பீதியடைந்த அப்பகுதி வாசிகள் சிலர் அதனை வீடியோ எடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் 4 நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காளான் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வளாகத்தில் புலியின் நடமாட்டம் இருப்பது தெரியவந்ததால் அங்கு விரைந்த வனத்துறையினர் ஆய்வை மேற்கொண்டனர். பசுமாட்டை வேட்டையாட புலி பதுங்கி இருந்த இடத்தில் அதன் ரோமங்கள் ஆங்காங்கே கொட்டி கிடந்ததும் தெரியவந்தது. புலி நடமாட்டத்தால் உதகை, மார்லிமந்து, புலிச்சோலை, ரோஸ் மவுண்ட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.