கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி அருகே உள்ள சிறுமலை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் ஆடுகளை வளர்த்து, விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் தினமும் காலை பத்துமணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் கொண்டு வந்து பட்டியில் அடைத்து விடுவார். அதன்படி, சந்தானம் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று பின்னர் பட்டியில் அடைத்து வைத்தார்.
அதன் பின்னர் தெரு நாய்கள் கூட்டமாகச் சென்று அடைத்து வைத்திருந்த ஆடுகளைக் கடித்துள்ளது. இதனால் ஆடுகள் அனைத்தும் சத்தம் போட்டதில் வீட்டிலிருந்த சந்தானம் ஓடி வந்து பார்த்தபோது நாய்கள் ஆடுகளைக் கடித்துத் தின்று கொண்டிருந்தது. பிறகு நாய்களைத் துரத்திவிட்டு ஆடுகளைப் பார்த்தபோது கொடூரமான காயங்களுடன் சில ஆடுகள் துடித்துக்கொண்டிருந்தது. உடனடியாக சந்தானம் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது நாய்கள் கடித்துக் குதறியதில் சுமார் 12 ஆடுகளில் மூன்று ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. பிறகு சந்தானம் அனைத்து ஆடுகளையும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு திட்டக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
இந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். அதற்கு சந்தானம் எனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், இறந்த ஆடுகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பிறகு அடக்கம் செய்தனர்.