சிம்லா: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கராவில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்; விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் ஆகியோருக்கு முறையாக ரூ. 3,000 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தோம். நமது நாட்டில் பெண்கள், காங்கிரஸ் அரசாங்கத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதை 2014-ம் ஆண்டுக்கு முந்தைய நாட்களில் பார்த்தீர்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை; வெறும் சண்டைகள் மட்டுமே உள்ளன. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து வளர்ச்சி குறித்த செய்திகளே இல்லை. ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ் தான் உத்தரவாதம் அளிபார்கள்.
இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசு தேவை. காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது. அவர்களும் அதை விரும்பவில்லை. மத்தியிலும்,மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்றம் அடைய முடியும். பிளவுபட்ட காங்கிரசால் பலனில்லை. வாரிசு அரசியலில் இருந்து மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். காங்கிரஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மீண்டும் தோல்வியடைந்தால், அக்கட்சியால் மீண்டும் வரவே முடியாது. பல மாநில மக்கள் காங்கிரசை ஆதரிக்க தயாராக இல்லை என்றும் விமர்சனம் செய்தார்.