மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். `மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலி’ , ‘வீட்டின் கதவுகளில் மின் கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல், கதவுகளைத் திறந்தவர் பலி’ போன்ற பல செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். மழை நேரத்தில் மின்சார விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்…?என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற தகவல்களை வழங்குகிறார் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மின்சார வாரிய ஊழியர் ஷேக் தாவுத்…
“வீடுகளில் மின்சார இணைப்பு கொடுக்கும்போது, தானாகவே ட்ரிப் ஆகக்கூடிய கருவி இணைப்பது நல்லது. இதன் மூலம் திடீரென அதிகமாக மின்சாரம் பாய்ந்தாலோ அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போதோ, தானாக ட்ரிப் ஆகி மின்சாதனங்களைப் பாதுகாக்க முடியும். அதேபோல், வீடுகளில் கண்டிப்பாக எர்த் கனெக்ஷன் அவசியம்.
எக்காரணம் கொண்டும், உடைந்த சுவிட்சுகள், பிளக் பாயின்ட்களை பயன்படுத்தாதீர்கள். கிரைண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் என ஒவ்வொரு மின்சாதனத்திற்கும் தனித்தனி பிளக் பாயின்ட் இருப்பது நல்லது.
வயர்கள் தேய்மானம் அடையும் போது, அவற்றின் மூலம் மின்கசிவு ஏற்படும். வயரிங்க்கான பொருள்களை வாங்கும் போது சிக்கனம் பார்க்காமல், தரமான பொருள்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.
மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புக்கான பொருள்கள் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த தரமான பொருள்களைத் தேர்வு செய்து வாங்குவது நல்லது.
வீடுகளில் மின்சார வயரிங் வேலை செய்யும் போது அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டும் செய்யுங்கள். வயரிங் வேலை செய்த பிறகு ஒருமுறைக்கு இருமுறை பாதுகாப்பு கருவிகள் கொண்டு, மின் இணைப்பு சரியாக உள்ளதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
பெரும்பாலும் அலங்கார விளக்குகள் எல்லா வீடுகளிலும் பொருத்தப்படுகின்றன. அலங்கார விளக்குகளைப் பொறுத்தவரை மதில் சுவரிலோ அல்லது, கதவுகளுக்கு மேலாகவோ இருக்கும்போது மழை நேரத்தில் அவை நிச்சயம் மழையில் நனைவதற்கு வாய்ப்பு அதிகம். இவ்வாறு நனைந்த மின்சாதனங்கள் மூலம் நிச்சயம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம். எனவே மழை நேரத்தில் வீட்டிற்கு வெளிப்புறம் இருக்கும் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அலங்கார விளக்குகள் போன்று தான் வீட்டின் அழைப்பு மணிகளும். பெரும்பாலும் அழைப்பு மணிகளுக்கான சுவிட்ச்சுகள் கதவுகளுக்கு வெளிப்புறம் தான் பதிக்கப்பட்டு இருக்கும். மழைத்தண்ணீர் இறங்கி சுவிட்ச் நனைந்திருக்கிறது எனில் கூடுமானவரை அழைப்பு மணிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அழைப்பு மணிகளைப் பதிக்கவென்றே பெட்டி போன்ற உபகரணங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பொருத்திவிட்டால் கூடுதல் பாதுகாப்பு.
சுவரின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆணி அடிப்பது, ஈரத்துணிகளைக் காயவைப்பது போன்ற செயல்பாடுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
குளியலறை, கழிப்பறை போன்று தண்ணீர் பயன்பாடு இருந்து கொண்டே இருக்கும் இடங்களில் சுவிட்ச்சுகளைப் பொருத்துவதைத் தவிர்த்து, அறைக்கு வெளிப்புறம் பொருத்துவது நல்லது. ஹீட்டர் தொடங்கி, வாஷிங் மெஷின் வரை அனைத்து மின்சாதன பொருள்களையும் அவற்றின் பயன்பாடு முடிந்த உடன் சுவிட்ச்சை ஆஃப் செய்து வைக்கவும்.
மின்கம்பத்திலோ அல்லது இணைப்புக் கம்பத்திலோ கால்நடைகளைக் கட்டுவது, துணிகளைக் காயவைப்பது, சிறுநீர் கழிப்பது, குழந்தைகளை விளையாட அனுமதிப்பது போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் பொருத்தப்பட்டுள்ள வயரிங் கனெக்ஷனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனை செய்து கொள்வது நல்லது. ஏதேனும் ஒரு வயர் தேய்மானம் அடைந்து பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் மாற்றிவிடுங்கள்.
வீடு தவிர்த்து நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும். மின் கம்பத்திற்கு மிக நெருக்கமாகச் செல்லாதீர்கள். உங்கள் பகுதியில் ஏதேனும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் செயல்படுவதும் அவசியம். எனவே மின்கம்பிகள் அறுந்துள்ள பகுதியில் சிறிய தடுப்பு வைத்து தடுத்துவிட்டு, உடனே மின்சார வாரியத்திற்குத் தெரியப்படுத்துங்கள். அங்கு நடவடிக்கை எடுக்க தாமதமாகும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்.