சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தற்போது, காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மீண்டும், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை விநாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, அணையின் நீர்மின் நிலையங்கள் மூலமாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது