கேரள மாநிலத்தில், பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து மாநில ஆளுநரை நீக்க, அம்மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளுநர் ஆரிப் முகமது கானின் உத்தரவை ரத்து செய்தது. இதன் பிறகும் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சிப்பதும், அதற்கு, ஆளுங்கட்சி அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. கடந்த சில
மாதங்களுக்கு முன்னர், துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும்
வகையில் அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், அந்த பதவிக்கு நிபுணர் ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், ஆளுநர் ஒப்புதல் அளித்தால்
மட்டுமே அது அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.