சீனாவில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையிலான அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
உலகின் பல்வேறு நாடுகள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பிவிட்ட நிலையில், நம் அண்டை நாடான சீனாவில் இன்னும் கொரோனா பரவல் உள்ளது. இதனால், அந்நாட்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த மாதம் ஜிங்பிங் மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் அமர வைக்கப்பட்டதால், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் வேகம் எடுத்துள்ளன.
இதனால், அதிகாரிகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது சீனா முழுதும் புதிதாக ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நாட்டின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக திகழும் குவாங்சவ் மாகாணத்தில், புதிதாக ௨,௨௩௦ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனிமைப்படுத்துதல், பொது ஊரடங்கு, கட்டாய தினசரி பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அரசு விடாமல் பின்பற்றி வருகிறது. இது, நாடு முழுதும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் நிர்வாகத்துக்கு எதிராக சவால்களை உருவாக்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில் அரசு அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் குறித்த விபரங்கள் இல்லை.
இந்நிலையில், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சீன போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement