சிறையில் உள்ள அண்ணனுக்கு கொடுப்பதற்காக பிஸ்கெட் பாக்கெட்டுகளில் கஞ்சா கடத்திய தம்பி கைது

சேலம்: சிறையில் உள்ள அண்ணனுக்காக பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா கடத்திய தம்பியை கைது செய்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள ஏழுமாத்தானூரை சேர்ந்தவர் கார்த்தி. இவர் திருட்டு வழக்கில் சங்ககிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், கார்த்தியை பார்ப்பதற்காக அவரது தம்பி சித்தேஷ் (21) நேற்று பகல் சேலம் மத்திய சிறைக்கு வந்துள்ளார். இதற்கான மனு எழுதிவிட்டு, அண்ணனை பார்ப்பதற்காக கைதிகளை சந்திக்கும் இடத்திற்கு சென்றார்.

அண்ணனுக்கு சித்தேஷ் கொண்டு வந்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டை சிறை வார்டன் காளிபிரகாஷ் பிரித்து சோதனை செய்தார். அப்போது பிஸ்கெட் பாக்கெட் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவற்றை முழுவதுமாக திறந்து பார்த்தபோது, உள்ளே கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பிஸ்கெட் பாக்கெட்டிலும் நடுவில் துளையிட்டு, அதன் உள்ளே கஞ்சாவை பொட்டலம் மறைத்து வைத்திருந்தார். இவ்வாறு 20 கிராம் கஞ்சா உள்ளே இருந்தது. இதையடுத்து சித்தேசை பிடித்த சிறை வார்டன் காளிபிரகாஷ், அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி ஜெயிலர் மதிவாணன் கொடுத்த புகாரின்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சித்தேசை கைது  செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.