மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் பகுதி 2008ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் பகுதி வளர்ச்சி ஆணையத்தின் (எம்எச்ஏடிஏ) சார்பில் மேம்படுத்தப்பட்டது. இந்த குடியிருப்பினை மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த புகார் தொடர்பாக உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்திடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அவரை கைது செய்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் சஞ்சய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறையினருக்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவரின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.
சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, பத்ரா சால் மறுவடிவமைப்பு தொடர்பான பணமோசடி வழக்கில், அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும், திரைக்கு பின்னால் செயல்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது. அவர் மீது துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், பண மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு மும்பையில் உள்ள பண பரிவர்த்தனை தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவருமான பிரவீன் ராவத்துக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரூ.112 கோடி பண மோசடி செய்ததாக பிரவீன் ராவத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில், ரூ.1.06 கோடி சஞ்சய் ராவத்துக்கும், அவரது மனைவி வர்ஷா ராவத்துக்கும் பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“கோரேகானில் உள்ள பத்ரா சால், 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 672 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2008ஆம் ஆண்டில் இதனை மறுசீரமைக்க திட்டமிட்ட மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையம் (MHADA), இதற்கான ஒப்பந்தத்தை, ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (HDIL) இன் சகோதர நிறுவனமான குரு ஆஷிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் (GACPL) எனும் நிறுவனத்துக்கு வழங்கியது.
ஒப்பந்தத்தின்படி, 672 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அங்கு வசித்த குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் சில குடியிருப்புகளை மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்க வேண்டும். மீதமுள்ள நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ளலாம். ஆனால், கடந்த 14 ஆண்டுகளில் அங்கு வசித்த குடும்பங்களுக்கு ஒரு குடியிருப்பு கூட கிடைக்கவில்லை. பத்ரா சால் மறுசீரமைக்கவும் படவில்லை. அதேசமயம், நிலங்களை தனியார் பில்டர்களுக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் ரூ.1,034 கோடிக்கு விற்றுவிட்டது.” என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.