மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு, சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 672 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பினை கடந்த 2008ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவையின் உறுப்பினருமான சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அவரை கைது செய்தனர் ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ரூ.112 கோடி பண மோசடி செய்ததாக சஞ்சய் ராவத் உதவியாளர் பிரவீன் ராவத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில், ரூ.1.06 கோடி சஞ்சய் ராவத்துக்கும், அவரது மனைவி வர்ஷா ராவத்துக்கும் பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, அவர் மீது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.
சஞ்சய் ராவத் ஜாமீன் மனு மீதான விசாரணை, கடந்த நவம்பர் 2ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9ம் தேதி (இன்று) வரை நீட்டித்த நீதிமன்றம், அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்ப்படும் என தெரிவித்தது. அதன்படி இன்று சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத்துக்கு, மும்பையில் உள்ள பண பரிவர்த்தனை தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி சிறப்பு உத்தரவிட்டது.
தீவிரவாதிகளின் உடற்பசிக்கு இரையாகும் பெண்கள்?..தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை.!
அதேபோல் சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவருமான பிரவீன் ராவத்துக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய் ராவத், விடுதலை ஆனதை தொடந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.