மயிலாடுதுறை : கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சீர்காழி அருகே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் சீர்காழி பழையார், திருமுல்லை வாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் 10 ஆயிரம் விசை படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக புகழ் பெற்ற சுற்றுல தளங்களான பூம்புகார், தரங்கம்பாடியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை பகுதியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் கடலூர் மாவட்டத்திலும் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்லவில்லை.
49 மீனவ கிராமங்களை சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட விசை படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பருவ மழை பாதிப்பு மற்றும் கடல் சீற்றம் ஆகியவை அடுத்த 2 மாதங்களுக்கு இருக்கும் என்பதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு நிவாரணம் உதவி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.