புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து எஸ்.பி தீபிகா உத்தரவின் பேரில் தனி சிறப்பு படை அமைக்கப்பட்டது. இவர்கள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் புதுச்சேரி சாரம் தென்றல் நகரில் உள்ள ஒரு வீட்டில் கோரிமேடு காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் ரமேஷ் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையில் மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை போதை பொருட்களையும் ரூபாய் 24.56 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சென்னை மதுராந்தகத்தை சேர்ந்த ஷாஜகான், சத்தியமூர்த்தி ஆகியோரிடம் இருந்து போதை பொருட்களை வாங்குவதாக தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 7.31 லட்சம் ரூபாயும், போதைப்பொருள், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி கன்டெய்னர் வாகனம் மற்றும் ஒரு சொகுசு காரை போலீசார் கைப்பற்றினர். இவர்கள் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரிடம் போதை பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து செங்குன்றம் விரைந்த போலீசார் ரவியை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பெயரில் இரண்டு கன்டெய்னர் மற்றும் இரண்டு லோடு வாகனத்தில் போலீசார் சோதனை செய்தனர்.
அதில் மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டைகளில் இருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 6 டன் எடையுள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மரக்காணத்தை சேர்ந்த குமார், சென்னை சேர்ந்த நடராஜன், தூத்துக்குடி சேர்ந்த கோபால், மணிகண்டன், ஆனந்த் ஆகியோரை கைது செய்த போலீசார் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றனர்.