புதுடெல்லி: ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் தாமரை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது.
ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ இலச்சினையை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த இலச்சினையில், பூமிப்பந்து ஒரு தாமரையின் மீது வைக்கப்பட்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ், தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக தவறவிடுவதே இல்லை என்று விமர்சித்துள்ளது.அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “70 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார். தற்போது பாஜக ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்க உள்ள நிலையில் வெளியிட்டுள்ள இலச்சினையில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில், மோடியும் பாஜகவும் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வெட்கப்படுவதே இல்லை என்பது நாம் அறிந்ததுதான் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. இதையொட்டி, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளையும், தாமரை இலச்சினையையும் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
அப்போது பிரதமர் பேசியதாவது: ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்பது நம் நாட்டுக்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஜி-20 இலச்சினைக்காக ஆயிரக்கணக்கானோர் புதுமையான வடிவங்களை அரசுக்கு அனுப்பினர். இதில் இருந்து, தாமரை மலரில் பூமி வீற்றிருக்கும் சின்னம் இறுதி செய்யப்பட்டது. ‘உலகம் ஒரே குடும்பம்’என்ற இந்தியாவின் பாரம்பரியம், நம்பிக்கை, சிந்தனையை தாமரை குறிக்கிறது. போரில் இருந்து உலகம் விடுதலை பெறவேண்டும் என்ற புத்தரின் போதனை, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையையும் தாமரை சின்னம் பிரதிபலிக்கிறது. அதன் 7 இதழ்கள் 7 கண்டங்களையும், 7 இசையையும் குறிக்கின்றன. இது உலகை ஒன்றிணைப்பதை உணர்த்துகிறது.
சர்வதேச அளவில் நெருக்கடி, குழப்பம் நீடிக்கும் நேரத்தில் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி, செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவி தாமரை மீது வீற்றிருக்கின்றனர். இதேபோல தாமரை மீது வீற்றிருக்கும் நமது பூமி, அறிவிலும் செல்வத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
சுதந்திரத்தின்போது பூஜ்ஜியத்தில் தொடங்கி, உச்சத்தை இலக்காக கொண்டு புதிய பயணத்தை தொடங்கினோம். கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து அரசுகளும், மக்களும் இணைந்து இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றனர். இந்த உணர்வோடு உலகத்தையும் நாம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம், ஊழல் ஒழிப்பு, வணிகத்துக்கு ஏற்றசூழல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. ஜி-20 தலைமை பதவிக்கான காலத்தில் இந்தியாவின் அனுபவங்கள் உலகத்தை புதிய பாதையில் பயணிக்கச் செய்யும்.
‘ஒரே சூரியன், ஒரே உலகம்’ என்ற இந்தியாவின் கொள்கை உலகின் எரிசக்தி துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற இந்தியாவின் சுகாதாரக் கொள்கையும் சர்வதேச அளவில் போற்றப்படுகிறது. இந்த வரிசையில் ஜி-20 அமைப்புக்காக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை தேர்வு செய்துள்ளோம்.
ராஜஸ்தான், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம், உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்கள் விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றவை. அந்த வகையில், ஜி-20 அமைப்பின் நிகழ்ச்சிகள் தலைநகர் டெல்லி மட்டுமன்றி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும். இதன்மூலம் இந்தியாவின் விருந்தோம்பல் உலகத்துக்கே பறைசாற்றப்படும். இவ்வாறு பிரதமர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Over 70 years ago, Nehru rejected the proposal to make Congress flag the flag of India. Now,BJP’s election symbol has become official logo for India’s presidency of G20! While shocking,we know by now that Mr.Modi & BJP won’t lose any opportunity to promote themselves shamelessly!
— Jairam Ramesh (@Jairam_Ramesh) November 9, 2022