திருச்செந்தூர் கோவிலில் இதையெல்லாம் பயன்படுத்தக்கூடாது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “கோவில்களின் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே, திருச்செந்தூர் கோயிலின் உள்ளே மொபைல் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவருடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா? என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.

திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல.கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருச்செந்தூர் கோயிலில் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவு.

திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாருக்கும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது. கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்தே அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவிலில் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை ஆணையர் அனுப்ப வேண்டும். இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்” எனக்கூறி வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.