அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் கடந்த ஆண்டு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளி கல்வித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், ஒமிக்ரான் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11ஆம் வகுப்பு சென்று விட்டனர் இந்த நிலையில், அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில், அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒத்திவைக்கப்பட்ட துபாய் பயணத்தை நாளை மேற்கொள்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 மாணவர்கள் நாளை திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியையும் அவர்கள் காண உள்ளனர். இதற்காக, தமிழகம் முடிவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அனைவரையும் வரவேற்ற பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
மேலும் கல்வி சுற்றுலா செல்வது குறித்து அனைவரும் கட்டுரை எழுத வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும் மாணவர்களுக்கு அவர் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளை காலை அனைத்து மாணவ மாணவிகளும் துபாய் செல்ல உள்ளனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுலா குறித்து பேசிய மாணவ, மாணவிகள், “நாங்கள் மிகவுன் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்துதான் எங்களை படிக்க வைக்கிறார்கள். வெளிநாடு செல்வதெல்லாம் எங்களுக்கு கனவு போன்றது. நாங்கள் அதையெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை. தற்போது அது நடக்க போகிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதனை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.” என்றனர்.