தேர்தல் பத்திர விற்பனையில் திருத்தம் | தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது: மஹூவா மொய்த்ரா

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் விற்பனை திட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள திருத்தம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவ.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கூடுதல் நாட்களுக்கு தேர்தல் பத்திரம் விற்பனை செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குஜராத் மாற்றும் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பாஜக கூடதலாக அநாமதேய நன்கொடை பெறுவதற்கு உதவி செய்யும்.

இதற்கு முன்பாக, நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நேரத்தை தவிர்த்து, ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் குறிப்பிட 10 தினங்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுவந்தன. தற்போதைய மாற்றம் தெளிவாக தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையமே விழித்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் மஹூவாவின் இந்த ட்வீட்டை டேக்செய்து, இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசு 23வது தவணை தேர்தல் பத்திர விற்பனையை நவம்பர் 9ம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என்று திங்கள் கிழமை அனுமதி அளித்திருந்தது. இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் நவ.9 – 15ம் தேதி வரை 23 வது தவணை தேர்தல் பத்திரவிற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக தேர்தல் பத்திரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சிகள் பணமாக நன்கொடை பெறுவதற்கு மாற்றாக நடைமுறையில் உள்ள ஒரு திட்டம். வழக்கமாக நிர்ணயிக்கப்பட்ட மாதங்களில் 1- 10 வரையிலான தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் விற்பனை செய்யப்படும். கடைசியாக, 2022ம் ஆண்டு அக் 1 முதல் 10 தேதிகள் வரை தேர்தல் விற்பனை செய்யப்பட்டது. வரும் 12 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்திலும், அடுத்தமாதம் 1, 5 ஆகிய இரண்டு தேதிகள் குஜராத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.