ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அனுமதி அட்டையில் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இருந்ததால் பரபரப்பு.
சம்பவம் குறித்து கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய மாநிலம் கர்நாடகத்தில் நவம்பர் 6-ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (TET-2022) கலந்து கொண்ட ஒரு விண்ணப்பதாரரின் தேர்வு ஹால் டிக்கெட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
அநாகரிகமான அந்த புகைப்படத்துடன் வெளியான அனுமதி அட்டையின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, இச்சம்பவம் குறித்து கர்நாடக கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ருத்ரப்பா கல்லூரியில், வேட்பாளர் ஒருவர் நடிகையின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட்டை வெளியிட்ட பிறகு, அந்த கல்லூரியின் முதல்வர் சைபர் கிரைம் பொலிஸில் புகார் அளித்தபோது இந்த குழப்பம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து பொலிஸார் கூறியதாவது, ஓன்லைனில் விண்ணப்பத்தை தாக்கல் செய்து சமர்ப்பிக்கும்போது புகைப்படத்தைப் பதிவேற்றும் நேரத்தில் முட்டாள்தனமாக தவறு நடந்திருக்கலாம்.
சர்ச்சைக்குரிய இந்த அனுமதிச்சீட்டுக்கு உரிய விண்ணப்பதாரர், விண்ணப்பத்தை ஓன்லைனில் தான் பூர்த்தி செய்யவில்லை என்றும், ஆனால் தன் சார்பாக மற்றோரு நபரை அதைச் செய்யும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.
அதேநேரம், விண்ணப்பதாரர்கள் ஓன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும், அதற்காக ஒரு user id மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும், இது விண்ணப்பதாரருக்கு பிரத்யேகமானது மற்றும் வேறு யாரும் அதில் தலையிட முடியாது என்று கல்வித்துறை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஹால் டிக்கெட்டை தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்பதால், அதை உருவாக்குவதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “இந்தப் பிரச்சினை குறித்து எந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் திணைக்களத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. இருப்பினும் இந்த விவகாரத்தை விசாரித்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று பொதுக்கல்வித் துறை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.