நந்தியாலா மாவட்டம் யாகண்டி ஷேத்திரத்தில் கார்த்திகை மகா தீப விழா கோலாகலம்-கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தது

திருமலை : நந்தியாலா மாவட்டம் யாகண்டி ஷேத்திரத்தில் கார்த்திகை மகா தீப விழா உற்சவம் கோலாகலமாக நடந்தது.ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தில் உள்ள யாகண்டி  க்ஷேத்திரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில்  கார்த்திகை மகா  தீப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா பங்கேற்றார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:

முதல்வர்  ஜெகன்மோகனின் தலைமையில் 4 ஆண்டுகளாக தேவஸ்தானம் பெரிய அளவில் இந்து தர்ம பிரசார நிகழ்ச்சிகளை ஒருபுறம் நடத்தி வருகிறது. மறுபுறம் மிகவும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருகிறது.   வெளிப்படையான நிர்வாகத்தின் ஒரு பகுதியாக தேவஸ்தானத்தின் சொத்துக்கள் தொடர்பான வெள்ளை அறிக்கை 2 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது.  இரு தினங்களுக்கு முன்பு சுவாமியின் பல்வேறு வங்கிகளில் ₹15,938 கோடி மற்றும் 10,258 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த 1933ல் திருமலை திருப்பதி உருவானதில் இருந்து இதுவரை எந்த அரசாங்கமோ, தேவஸ்தான அறங்காவலர் குழுவோ இவ்வாறு வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. இந்து தர்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள எந்த கோயிலுக்கு பக்தர்கள் சென்றாலும் கோ பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வரும் நாட்களில் நாடு முழுவதும் இந்நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கார்த்திகை மகா தீப உற்சவத்தின் மூலம் மக்கள் நீண்ட ஆயுளை பெறுவார்கள். நாடு செழிக்கும் என்று பல புராணங்கள் கூறுகின்றன.  அதனால் தான் தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கார்த்திகை தீப உற்சவம் நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று(நேற்று முன்தினம்) யாகண்டியிலும்,  14ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 18ம் தேதி திருப்பதியிலும் கார்த்திகை தீப உற்சவம் நடைபெற உள்ளது.

 கார்த்திகை மகா தீபஉற்சவத்தில் பங்கேற்று நேரில் தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் வெங்கடேஸ்வர சுவாமியும்,  உமாமஹேஸ்வர சுவாமியும் ஞானம் அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் கடசானி ராம் பூபால் ரெட்டி மற்றும் கடசானி ராமிரெட்டி ஆகியோரின் முயற்சியால் யாகண்டியில் கார்த்திகை தீப உற்சவம் பெரிய அளவில் நடைபெறுவது நம் அனைவருக்கும் அதிர்ஷ்டம்.

இவ்வாறு, அவர் பேசினார். பின்னர், ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் வைகானச ஆகம சாஸ்திரப்படி திருவாராதனம் செய்தனர். பண்டிதர்கள் விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீலட்சுமி அஷ்டோத்தர சதநாமாவளி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தனர். பிறகு ஸ்ரீமகாலட்சுமி பூஜை நடந்தது.

எஸ்வி இசை மற்றும் நாட்டிய கல்லூரி சார்பில் மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.  பக்தர்களுடன் 9 முறை தீப மந்திரம் ஓதப்பட்டு கூட்டு லட்சுமி நீரஜனம் செய்யப்பட்டது.  
முடிவில், அன்னமாச்சார்யா திட்டத்தின் கலைஞர்கள் கோவிந்தனமாலு பாடி நட்சத்திர ஆரத்தி மற்றும் கும்ப ஆரத்தி வழங்கினர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில்

மேலும், அறங்காவலர் குழு தலைவர் சுப்பா கூறுகையில், ‘முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவின்பேரில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  இந்து தர்மத்தை பரப்பும் வகையில் முக்கிய நகரங்களில் வெங்கடேஸ்வர சுவாமி  கோயில்கள் கட்டப்படுகின்றன.  அடுத்தாண்டு மும்பை, காந்திநகரில் சுவாமி  கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படும். மேலும் எஸ்சி., எஸ்டி., பிசி., மீனவ  கிராமங்களில் இந்த ஆட்சி காலத்தில் 550 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த  ஒன்றரை ஆண்டுகளில் தெலுங்கு மாநிலங்களில் 1,500 கோயில்கள் கட்டப்படும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.