திருவனந்தபுரம்: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் உள்ளனர். மாநில அரசின் பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. இந்நிலையில், சில மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நிலவுவதால் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சிகளில் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபடுகின்றன. மேற்கு வங்க ஆளுநராக தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருந்தபோது, அவரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
தற்போது, கேரளாவிலும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசால் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்திற்கு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் கேரள உயர் நீதிமன்றம், துணைவேந்தர்களுக்கு எதிராக மேல் நடவடிக்கை எதையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், துணைவேந்தர்களின் நியமனம் தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையேயான மோதல் வெளிப்படையானதாக மாறி உள்ள நிலையில், ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் நோக்கில் அவரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து நீக்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை இன்று (நவ.9) ஒப்புதல் அளித்துள்ளது. மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அது சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.