தமிழ்நாட்டில் எப்படியாவது அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில மாதங்களாக மத்திய அமைச்சர்கள் அதிகமாகப் பங்கேற்கின்றனர். இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான ஆகியோர் அடங்குவர்.
அப்போது மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் பேசி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம் கிராமிய பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதி தமிழகத்துக்கு வருகிறார்.
அதற்கு அடுத்த நாள் 12-ம் தேதி தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். இவர்கள் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்சியைப் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளதாக அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்கள் வராமல் இருந்தாலாவது அந்த 5% ஓட்டு இருக்கும். இவர்களை மக்கள் பார்க்க, பார்க்க கோபம் தான் அவர்களுக்கு வரும். ஏன் என்றால் தமிழகத்திற்கு எதிரான எல்லா வேலைகளையேனும் இவர்கள் தான் பார்க்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்.
எனவே அவர்கள் வருவது ஒரு வகையில் தி.மு.க-வுக்கு நல்லது. அமித் ஷாவை பார்க்கும் போதும் மக்களுக்குக் கோபம் தான் வரும். மோடியை பார்த்தாலும் தமிழக மக்களுக்கு கோபம் தான் வரும். 10% இட ஒதுக்கீட்டால் மக்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு உட்காந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் முகத்தை காட்டாமல் இருந்தால் ஏற்கனவே போட்ட 5% பேர் ஒட்டு போடுவார்கள்” என்றார்.