தஞ்சாவூர் அருகே விவசாய நிலங்களை கையக்கப்படுத்தி புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாழை தார், வாழை இலை, நெற்கதிர்கள், நாற்றுக்கட்டு ஆகியவற்றுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறு, காவிரி ஆறு கடந்து செல்லும் செழிப்பான பகுதி. பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோயில், தியாகராஜர் சமாதி, காவிரி புஷ்பமண்டப படித்துறை உள்ளிட்ட பல சிறப்புகள் அமையப்பெற்ற ஊர். கும்பகோணம், அரியலூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களை இணைக்க கூடிய ஊராகவும் திருவையாறு இருந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். நகரப் பகுதியில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருப்பதே இதற்கு காரணம் என பலராலும் பேசப்பட்டு வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலுார் – மனாமதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவுப்படுத்தும் பணி சுமார் 91.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் திருவையாறில் புறவழிச் சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக கண்டியூர், மனகரம்பை, கீழே திருப்பந்துருத்தி, கல்யாணபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏற்கெனவே பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் திருவையாறு தாசில்தார் அலுவலகம் எதிரே காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து விவசாயிகளிடம் பேசினோம், ”காவிரி ஆறு தவழ்ந்து செல்வதால் எப்போதும் விவசாயம் செழிப்பாக நடைபெற கூட பகுதியாக திருவையாறு இருந்து வருகிறது. முப்போகம் விளையக்கூடிய சிறப்பை பெற்ற ஊரில் புறவழிச்சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளால் பல்வேறு போராட்டம் நடத்தப் பட்டது. ஆனால் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் திருவையாறு தாசில்தார் அலுவலகம் முன்பு, வாழை இலை, வாழைத்தார், அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள், நாற்றுக்கட்டு, தேங்காய் உள்ளிட்டவையுடன் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினோம். விளையக் கூடிய வயல்வெளியை அழித்து அமைக்கும் புறவழிச்சாலை எங்களுக்கு வேண்டாம். திருவையாறு கடைவீதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும். விளை நிலங்களை அழிக்க அரசு, அதிகாரிகள் துணை போக வேண்டாம் என்றும் கோஷமிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறோம். இது குறித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறோம்” என்றனர்.