சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதுகுறித்து கருத்துதெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ‘‘சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டுகால போராட்டத்தில் இத்தீர்ப்பு ஒரு பின்னடைவு. சமூக நீதிக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய ஒருமித்த கருத்து உடையவர்கள் ஒன்றிணைய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகளும் இத்தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிராக அமைவதுடன், சமூக நீதிகொள்கைக்கும் மாறானது.
எனவே, இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, முடிவெடுக்க ஏதுவாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிதலைவர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நவ.12-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை கட்சி சார்பிலும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக விரைவில் மறு சீராய்வு மனு: இதற்கிடையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக திமுக சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசியலமைப்பு சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஓர் அரசியல் சட்டத் திருத்தம் அமையக் கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பு வகுத்து தந்துள்ள சமத்துவத்துக்கு எதிராக எந்த சட்டத் திருத்தமும் அமைந்துவிட கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள்.
ஆனால், இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பதுபோல அமைந்துள்ளது.
எனவே, நாட்டில் உள்ள 82 சதவீத பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியை காப்பாற்ற, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்க, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்ட, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய சட்டத்துக்கு வல்லுநர் குழு அமைப்பு: இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானநிலையில், தமிழகத்தில் சட்ட வல்லுநர் குழு அமைத்து தலைமைச் செயலர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கையை செயல்படுத்த சட்டம் இயற்ற ஏதுவாக, சட்ட வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மாநில அரசுக்கான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, ஏ.அருள்மொழி, வி.லட்சுமி நாராயணன், சட்டத் துறை செயலர்கள் பா.கார்த்திகேயன் (சட்ட விவகாரம்), ச.கோபி ரவிக்குமார் (சட்டம் இயற்றல்), சமூக நீதிகண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன், டிஎன்பிஎஸ்சிவழக்கறிஞர் சிஎன்ஜி நிறைமதி, மூத்த வழக்கறிஞர் ரவிவர்மா குமார் (சிறப்பு அழைப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.