NZvPAK: பாபர் – ரிஸ்வான் 2.0 கூட்டணி; பாகிஸ்தானின் 1992 உலகக்கோப்பை மோட் ரிப்பீட்டானதா?

‘History Will Repeat itself’ என்பார்கள். பாகிஸ்தான் விஷயத்தில் அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிஜமாகிக்கொண்டிருக்கிறது. 1992 உலகக்கோப்பையை போன்றே அரையிறுதிக்கு முன்னேறி, அங்கு அதே நியூசிலாந்தை அரையிறுதியில் இன்று தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. 1992 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இம்ரான் கான் பாகிஸ்தான் அணியை மெல்பர்ன் மைதானத்திற்குள் முன்நின்று அழைத்து சென்றார். இப்போது பாபர் அசாம் அதே வேலையை செய்ய இருக்கிறார். பாகிஸ்தான் எப்படி இதை சாத்தியப்படுத்தியது? நியூசிலாந்து எங்கே கோட்டைவிட்டது.

அரையிறுதிப் போட்டி நடைபெற்ற சிட்னி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். இங்கே இந்த உலகக்கோப்பையில் இதற்கு முன் நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது. போகப் போக பிட்ச் மந்தமாகும் என்பதால் சேஸிங் செய்யும் அணிகளுக்கு அத்தனை சாதகமானதில்லை இந்த மைதானம். ஆயினும் இந்த அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி போட்டியை சேஸிங் செய்தே 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. காரணம், நியூசிலாந்தின் மோசமான பேட்டிங்.

டாஸை வென்று விருப்பப்படி முதல் பேட்டிங் கிடைத்த போதும் அவர்கள் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 20 ஓவர்களில் 152 ரன்களை மட்டுமே எடுத்தனர். முக்கியமான பேட்ஸ்மேன்கள் அத்தனை பேருமே சொதப்பினர்.

டெவான் கான்வே, ஃபின் ஆலன், க்ளென் பிலிப்ஸ் இந்த மூன்று பேரும்தான் நியூசிலாந்து அணியின் அபாயகரமான வீரர்கள். இவர்கள் மூவரையுமே பாகிஸ்தான் அணி 8 ஓவர்களுக்குள்ளாகவே வீழ்த்திவிட்டார்கள்.

Nz

வில்லியம்சனின் இன்னிங்ஸ் எப்போதுமே இரண்டு பாதிகளை கொண்டதாக இருக்கும். முதல் பாதி ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இன்னிங்ஸை கட்டமைப்பதற்காக எடுத்துக் கொள்வார். அடுத்த பாதியில் அதிரடி காட்டி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பாக முடிப்பார். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் கூட அதைத்தான் செய்திருந்தார். ஆனால், இங்கே இந்தப் போட்டியில் வில்லியம்சனால் தன்னுடைய முதல் பாதி இன்னிங்ஸை மட்டுமே ஆட முடிந்தது. இரண்டாம் பாதி இன்னிங்ஸை தொடங்க அவர் நினைக்கும்போதே அவரின் விக்கெட்டையும் வீழ்த்திவிட்டார்கள். அப்படியிருந்தும் நியூசிலாந்து அணி கொஞ்சம் போட்டியளிக்கக்கூடிய வகையில் ஒரு ஸ்கோரை எட்டியது. அதற்கு காரணம், டேரில் மிட்செல் மட்டுமே.

டேரில் மிட்செல் 35 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். கடந்த உலகக்கோப்பையின் அரையிறுதியிலும் நியூசிலாந்து அணிக்காக மிக முக்கியமான இன்னிங்ஸை ஆடிக்கொடுத்திருந்தார். அது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக மாறியிருந்தது. ஆனால், இங்கே அப்படி மாறவில்லை.

நியூசிலாந்து பேட்டிங்கில் சொதப்பினார்கள் எனும்போது பாகிஸ்தானின் பந்துவீச்சைப் பற்றியும் ஃபீல்டிங்கை பற்றியுமே பேசியாக வேண்டும். ஷாகீன்-ஷா-அஃப்ரிடி இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஃபின் ஆலனின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

Afridi

தொடக்கத்திலிருந்தே ஷாகீன் ஷா அஃப்ரிடி ஸ்லோயர் ஒன்களை ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியிருந்தார். ஷாகீன் ஷா வீசியிருந்த இன்னிங்ஸின் முதல் பந்தின் வேகம் 124 Kmph மட்டுமே. ஃபின் ஆலனின் விக்கெட்டையுமே ஸ்லோயர் ஒன்னில்தான் வீழ்த்தியிருந்தார்.

பிற்பகுதியில் வில்லியம்சனின் விக்கெட்டுமே ஸ்லோயர் ஒன்னில்தான் வந்திருந்தது. போட்டிக்கு பிறகு ஸ்லோயர் ஒன்கள் எங்களின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருந்தது என மேத்யூ ஹேடன் பேசியிருந்தார். சரியான திட்டத்தை வைத்துக் கொண்டு அதை சரியாக செயல்படுத்தியும் காட்டியிருந்தார் ஷாகீன்-ஷா-அஃப்ரிடி.

பாகிஸ்தானின் ஃபீல்டிங்கும் அசத்தலாகவே இருந்தது. ஷதாப் கான் டெவன் கான்வேயை ரன் அவுட் செய்த விதம்தான் அதற்கு சாட்சி.

பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் டார்கெட். பாகிஸ்தானின் தற்போதைய ஃபார்மிற்கு அவர்கள் இந்த ஸ்கோரை எட்ட கொஞ்சம் தடுமாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்காத ட்விஸ்ட் அரங்கேறியது. இந்த உலகக்கோப்பையில் பெரிதாக சோபிக்காத ஓப்பனர்கள் பாபர் அசாமும் ரிஸ்வானும் இங்கே பயங்கரமாக ஆடினார்கள். அவர்களின் அணுகுமுறையிலேயே பெரிய மாற்றம் இருந்தது. வழக்கமான மெதுவான நிலையான ஆட்டத்தை ஆடாமல் எடுத்த உடனேயே அட்டாக் செய்யத் தொடங்கினார்கள். போல்ட் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தையே ரிஸ்வான் பவுண்டரி ஆக்கியிருந்தார். ரிஸ்வான் அடித்து ஆட அப்படியே பாபரும் சீக்கிரமே ரிதமுக்கு வந்துவிட்டார்.

Babar azam | Rizwan

இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சராசரி பவர்ப்ளே ஸ்கோர் 41 தான். ரன்ரேட் 6.9 தான். அதே நேரத்தில் இந்த உலகக்கோப்பையில் மட்டும் பவர்ப்ளேயில் அவர்களின் சராசரி ஸ்கோர் 35 மட்டும்தான். ரன்ரேட் 5.9 மட்டும்தான். ஆனால், இங்கே இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் 55 ரன்களை எட்டியிருந்தது.

பாபர் அசாம் + ரிஸ்வான் இருவருமே அசத்தலாக ஆடினர். ரிஸ்வான் இடமே கொடுக்காமல் டைட்டாக ஸ்டம்ப் லைனில் வந்த பந்துகளை கூட எளிதாக பவுண்டரி ஆக்கியிருந்தார். முதல் 10 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 87 ரன்களை எட்டியது. இந்த ஓப்பனிங் கூட்டணி 100 ரன்களைக் கடந்தது. இருவரும் அரைசதத்தைக் கடந்தனர். சரியான நேரத்தில் இருவரும் ஃபார்முக்குத் திரும்பி தரமான இன்னிங்ஸை ஆடிக்கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினர். இதன்பிறகு முகமது ஹாரிஸ் கொஞ்சம் நன்றாகவே ஆடி போட்டியை வெற்றிகரமான முடிவை நோக்கிக் கொண்டு சென்றார். கடைசி ஓவர் வரை போட்டி சென்றிருந்தாலும் அழுத்தமெல்லாம் நியூசிலாந்து பக்கமே இருந்தது. பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முக்கியமான பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரின் சொதப்பல், துடிப்பற்ற ஃபீல்டிங், எடுபடாத பவர்ப்ளே பௌலிங் போன்றவையே நியூசிலாந்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

2009 க்குப் பிறகு பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அந்த 92 உலகக்கோப்பை மெல்பர்ன் கனெக்சனும் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கிறது. வரலாறு ஏறக்குறைய ரிப்பீட் ஆகிவிட்டது. முழுமையாக ரிப்பீட் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.