வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி ஜென் மார்க் கூறும்போது, “இதுவரை ரஷ்யா – உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு நாட்டு தரப்பிலும் 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளன” என்று தெரிவித்தார்.
சமீப நாட்களாகவே போர் தொடர்பாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும், உக்ரைனில் ரஷ்ய ராணுவப் படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்து வந்தார். இந்த நிலையில்தான் உக்ரைனின் கேர்சான் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டிருக்கிறார்.
இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குறித்து ஜென் மார்க் கூறும்போது, “பரஸ்பர அமைதி வெறும் ராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே முடியாது. அதற்கு நீங்கள் வேறு வழிகளில் திரும்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.
போருக்கு காரணம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர்.